×

குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் மறைந்த சங்கரய்யாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: உடல் நலக்குறைவால் மரணமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா குடும்பத்தினரை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா உடல் நலக்குறைவால் கடந்த 15ம்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மதியம் குரோம்பேட்டை, நியூ காலனி 5வது பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் மற்றும் பாஜவினர் நேரில் சென்று, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான சங்கரய்யா இறப்பு தமிழக அரசியலுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய பேரிழப்பு. அவர் வாழ்க்கையையே கம்யூனிஸ்ட் கட்சியோடு ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மறைந்த சங்கரய்யாவுக்கு, நிச்சயமாக மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அவர் மிகப்பெரிய ஒரு தலைவர். தமிழகத்தினுடைய ஒரு மிகப்பெரிய ஆளுமை.

அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டால் தமிழக மக்கள் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். விருதுகள் அனைத்திற்கும் சில நடைமுறைகள் உள்ளன. பாரத ரத்னா விருது குறித்து அவரது குடும்பத்தினர் முன்னெடுப்புகள் செய்யும்போது அவர்களுடன் இருந்து முன்னெடுப்புகளை செய்வோம். அவருடைய சேவையை பாராட்டுவதற்கும், சேவையை போற்றுவதற்கும் நிச்சயமாக நாம் அவரை போற்ற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் மறைந்த சங்கரய்யாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sankaraiah ,Union Minister of State L. Murugan ,Chennai ,Communist Party ,Communist Party of India ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...